இராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பலர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்நிலையில் அரசின் வழிகாட்டுதலின்படி நோய்த்தடுப்பு நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டு வருவதோடு தடுப்பூசி போடுவதை ஊக்கப்படுத்தியும் வருகிறது.
இதன் பயனாக நான்காயிரம் பேர் வரை நாள்தோறும் தடுப்பூசி செலுத்திக் கொண்டு வருகின்றனர். சுமார் ஒரு லட்சத்து 14 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
அதிக அளவில் பரிசோதனை செய்யப்படுவதால் 300 முதல் 400 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. தொண்டி அரசு மேல்நிலைப்பள்ளி கரோனா சிகிச்சை மையமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 100 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டு 10 ஆக்சிஜன் சிலிண்டர்களும், மூன்று ஆக்சிஜன் செறிவூட்டிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
மாவட்ட நிர்வாகத்தின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக சுமார் 1500 கிராமங்கள் நோய்த்தொற்று பாதிப்பு இல்லாத பச்சை மண்டலமாக இருந்து வருகிறது.