மதுரை: பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச். ராஜா புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்துகொண்டபோது மேடை அமைப்பது தொடர்பாகப் பிரச்சினை ஏற்பட்டது. இந்நிலையில், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஹெச். ராஜா மனு ஒன்றைத் தாக்கல்செய்திருந்தார்.
அதில், "2018ஆம் ஆண்டு திருமயம் காவல் நிலையத்திற்குள்பட்ட பகுதியில் கோயில் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்றபோது மேடை அமைப்பது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில் காவல் ஆய்வாளர் மனோகரன் என் மீது அளித்த புகாரின் அடிப்படையில் திருமயம் காவல் நிலையத்தில் நான் உள்பட பல்வேறு நபர்கள் மீது வழக்குப் பதியப்பட்டது.
தலைமறைவு: இது அரசியல் காழ்ப்புணர்ச்சி
தற்போது, இந்த வழக்கில் திருமயம் கீழமை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்செய்யப்பட்டுள்ளது. அந்தக் குற்றப்பத்திரிகையில் என்னை, 'ஹெச். ராஜா தலைமறைவு' எனக் குறிப்பிட்டுள்ளனர்.
இது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு கீழமை நீதிமன்றம் எனக்கு அழைப்பாணை அனுப்பியுள்ளது.
முன்பிணை வேண்டும்
எனவே இந்த வழக்கில் காவல் துறையினர் என் மீது கைது நடவடிக்கையில் ஈடுபடாமல் இருப்பதற்காக முன்பிணை வழங்க வேண்டும், நீதிமன்றம் விதிக்கும் அனைத்துக் கட்டுப்பாடுகளையும் பின்பற்றுகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி சந்திரசேகரன் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது, அப்போது எதிர் மனுதாரரான தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த துரைச்சாமி ஹெச். ராஜாவிற்கு முன்பிணை வழங்க எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.
உயர் நீதிமன்றம் கேள்வி
அப்போது நீதிபதி சந்திரசேகரன், காவல் துறை தரப்பில் தாக்கல்செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் மனுதாரர் 'தலைமறைவு' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, மனுதாரருக்கு கீழமை நீதிமன்றம் 'அழைப்பாணை' அல்லது வாரண்ட் அனுப்பியதா எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி, மனுதாரருக்கு அனுப்பப்பட்ட கீழமை நீதிமன்ற அழைப்பாணை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல்செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும்: அவரின் முன் உள்ள சவால்களும்!