மதுரை மாவட்டம், மேலூரைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், "மேலூர் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினராக உள்ளேன். இந்த சங்கத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு தேர்தல் அறிவிக்கப்பட்டது.
ஆனால், ஆளுங்கட்சியின் தூண்டுதலின் பெயரில் தேர்தல் நடத்தும் அலுவலர், அலுவலகத்தில் இல்லாமல் எங்களது வேட்பு மனுக்களை வாங்கவில்லை.
தொடர்ந்து இதுகுறித்து மேலூர் காவல் நிலையம், உயர் அலுவலர்களுக்கு புகார் அளிக்கப்பட்டது. பின்னர் தேர்தலை ரத்து செய்து அறிவிக்கப்பட்டது. தற்போது மேலூர் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்திற்கு உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்திற்கு வருகிற அக்டோபர் 7ஆம் தேதி அன்று தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்தல் இரண்டு முறை அறிவிக்கப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது நடைபெறவுள்ள தேர்தலில் சரியான முறையில் நடைபெற வேண்டும்.
தேர்தல் நடைபெறும் அலுவகத்திற்கு காவல்துறை பாதுகாப்பு அளித்து தேர்தல் நடைபெறும்போது முழுமையாக காணொலி பதிவுச் செய்ய வேண்டும்.
மேலும் உயர் அலுவலர்களை தேர்தல் நடத்தும் அலுவலர் நியமித்து கண்காணிக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.
இதேபோல், மதுரையைச் சேர்ந்த பிரபு என்பவர் மதுரை தாலுகா வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தேர்தலை காணொலி மற்றும் காவல்துறை பாதுகாப்பு வழங்கவும் மனு செய்யப்பட்டது.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் சத்யநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு, அப்போது தேர்தலின் போது காவல்துறை உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் மேலும் தேர்தலை முழுமையாக காணொலியாக பதிவு செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.