மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள சாத்தமங்களத்தைச் சேர்ந்தவர் சுமதி. இவர் மேலூர்- சிவகங்கை சாலையிலுள்ள ஆர்.சி பள்ளி முன்பாக இருசக்கர வாகனத்தில் சென்ற போது, இரண்டு வாலிபர்கள் வாகனத்தில் வந்து சுமதியின் கழுத்தில் அணிந்திருந்த ஐந்து சவரன் தாலி சங்கிலியைப் பறித்து தப்பியோட முயன்றனர். அப்போது சுமதி கூச்சலிட்டு அருகில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்துள்ளார். உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள் இருவரையும் சுற்றிவளைக்கவே ஒருவன் பட்டாகத்தியை காட்டி மிரட்டி தப்பியோடிவிட்டான்.
மற்றொருவன் தப்பமுயலும்போது அவனை பொதுமக்கள் பிடித்துவிட்டனர். பின்னர் அவனை மரத்தில் கட்டிவைத்து அடித்து நையப்புடைத்ததால் அப்பகுதியில் பரபரப்பு எற்பட்டது. பின்னர் காவல்துறையினர் திருடனை மீட்டு அவரிடமிருந்த பலவகை நம்பர் பிளேட்டுடன் கூடிய இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். மேலும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சங்கிலி பறிப்பு ஈடுபட்ட நபர் திருச்சியைச் சேர்ந்த கார்த்தி என்பது தெரியவந்தது. இதனிடையே கார்த்தியின் கூட்டாளியை காவல்துறையினர்தேடிவருகின்றனர்.