விளைநிலத்தில் அனுமதியின்றி காற்றாலைகள் அமைக்கப்பட்டுவருவதைத் தடுக்க வேண்டுமென சென்னை அடையாறு பகுதியைச் சேர்ந்த இயற்கை ஆர்வலரான குமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல்செய்திருந்தார்.
அம்மனுவில், “சென்னை அடையாறு பகுதியைச் சேர்ந்த நான் அடிக்கடி தொழில் நிமித்தமாக தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சுற்றிப்பார்க்க சென்றபோது, அங்கு பல்வேறு இடங்களில் காற்றாலைகள் அமைக்கப்பட்டுள்ளதைக் கண்டேன்.
இது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் தகவல் கோரி பெற்றேன். அதில், காற்றாலை அமைந்துள்ள பல இடங்களில், இயற்கைக்கு தீங்கு விளைவிக்காத வகையில் அமைக்கப்பட்டதற்கான தடையில்லா சான்றிதழ்கள் பெறுவது உள்ளிட்ட எந்தவொரு விதிமுறையும் கடைப்பிடிக்கப்படவில்லை என்றும் பலவற்றுக்கு முறையான அனுமதி பெறப்படவில்லை என்றும் தெரியவந்தது.
விளைநிலத்தை இத்தகைய பணிகளுக்குப் பயன்படுத்தக் கூடாது, விமான நிலையத்திற்கு அருகில் 10 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு இதுபோன்ற காற்றாலைகள் அமைக்கக் கூடாது என்பன போன்ற விதிமுறைகள் உள்ள சூழலில் அதற்கு மாறாக காற்றாலைகள், அதற்குரிய ஜெனரேட்டர்களை நிறுவியுள்ளனர். அத்துடன், அவற்றுக்கு அரசிடம் முறையான அனுமதி பெறவில்லை என்பதும் தெரியவந்தது.
இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தும், இதுவரை எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, தூத்துக்குடி மாவட்டத்தில் விளைநிலத்தில் அனுமதியின்றி காற்றாலைகள் அமைப்பதைத் தடுக்க வேண்டும். அத்துடன், இனி காற்றாலைகள் அமைக்கும் இடங்களை முறைப்படுத்த உத்தரவிட வேண்டும்” எனக் கோரிக்கைவிடுத்திருந்தார்.
இந்த மனுவானது, மதுரைக் கிளை நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஆனந்தி ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பாக இன்று (ஜன. 05) விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுவை ஆராய்ந்த நீதிபதிகள், “இது குறித்து மத்திய - மாநில அரசுகள், விமான போக்குவரத்துத் துறை, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பதில் அளிக்க வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை பிப்ரவரி 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க : எம்பி, எம்எல்ஏக்கள் மீதான குற்ற வழக்குகள்: விசாரணையைத் துரிதப்படுத்த உத்தரவு!