மதுரை: குபேந்திரன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல்செய்திருந்தார். அதில், “மாநில நெடுஞ்சாலை எண் 100இல் மதுரை காளவாசல் பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணி நடந்தது. இதற்காக காளவாசல் சந்திப்பு முதல் குரு திரையரங்கு சந்திப்பு வரை உள்ள பழமையான அரசமரம், பூவரசம், நெட்டிலிங்க மரம் உள்ளிட்ட மரங்கள் வெட்டப்படுகின்றன.
சுமார் 200-க்கும் மேற்பட்ட மரங்கள் இதுவரை வெட்டப்பட்டுள்ளன. நலத் திட்டங்களுக்காக மரங்கள் வெட்டுவதைத் தவிர்த்து, வேறு பகுதியில் நட்டால் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கலாம். எனவே, நலத்திட்டங்களுக்காக மரங்களை வெட்டுவது தொடர்பாக விதிகள், வழிகாட்டுதல்களை உருவாக்க வேண்டும்.
மேலும் மரங்களை வேரோடு அகற்றி, வேறு இடத்தில் நடும் நவீன இயந்திரங்களைப் பயன்படுத்தவும், மரங்களை வெட்டும்போது மரத்தைச் சார்ந்து வாழும் பறவைகள், உயிரினங்களின் நலன்களைப் பாதுகாக்கவும், வெட்டப்படும் மரங்களுக்கு ஈடாக 1:10 என்ற விகிதத்தில் மரக்கன்றுகளை நடவும் உத்தரவிட வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் டி.எஸ். சிவஞானம், எஸ். ஆனந்தி ஆகியோர் மனு மீதான விசாரணையை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டனர்.