மதுரை: திருச்சி கே.கே. நகரை சேர்ந்த மருத்துவர் கார்த்திக், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘ஏழை மக்களின் நலன் கருதி தமிழ்நாடு முதலமைச்சர் மருத்துவ காப்பீடு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. ஏழை நோயாளிகள், அறுவை சிகிச்சைக்கு, அரசின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைகளில் சேர்க்கப்படும் போது முறையான கவனிப்புகள் வழங்கப்படுவது கிடையாது. கவனமுடன் சிகிச்சை அளிப்பது இல்லை.
இதனால் பல கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களின் நோக்கம் நிறைவேறாமல் போகிறது. ஆகவே அரசு மருத்துவ காப்பீடு திட்டங்களை முறை செயல்படுத்த உத்தரவிட வேண்டும். முறையான விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள், நிலையான செயல்பாட்டு நடைமுறைகள், அடிக்கடி தணிக்கைகள், திடீர் ஆய்வுகள், முறையான பதிவேடு பராமரித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை அதிகாரிகள் தொடங்க வேண்டும். இத்தகைய விதிகள் மற்றும் வழிகாட்டுதல்களுக்கு இணங்காத மருத்துவமனையின் உரிமங்களை ரத்து செய்யப்பட வேண்டும்.
குறிப்பாக அரசாங்க மருத்துவ காப்பீடு திட்டதின் கீழ் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு உரிய கவனம் செலுத்தாத மருத்துவமனைகள், மருத்துவர்கள், ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயண பிரசாத் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் மருத்துவர், மருத்துவமனைகளை வழக்கில் எதிர் மனுதாரராக இணைத்திருக்க வேண்டும். இதுகுறித்து மத்திய, மாநில சுகாதாரத்துறை செயலர்கள் ஒரு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்று கூறி வழக்கை ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க:எஸ்.பி.வேலுமணி மீது டெண்டர் முறைகேடு வழக்கு: இறுதி அறிக்கைக்கான தடை நீட்டிப்பு!