சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகாவில் அமைந்துள்ள கீழடியில் தமிழ்நாடு தொல்லியல் துறையின் சார்பாக ஏழாம்கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. கீழடி அருகேயுள்ள கொந்தகை, அகரம், மணலூர் பகுதிகளில் இரண்டாம்கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்றுவருகின்றன.
2014ஆம் ஆண்டு இந்திய தொல்லியல் துறையின் சார்பாகத் தொடங்கிய அகழாய்வுப் பணி, 2017ஆம் ஆண்டுமுதல் தமிழ்நாடு தொல்லியல் துறையின் சார்பாக நடைபெற்றுவருகின்றது. 2020ஆம் ஆண்டுமுதல் கொந்தகை, அகரம், மணலூர் பகுதிகளிலும் பணிகள் விரிவுபடுத்தப்பட்டன.
ஒவ்வொரு கட்ட அகழாய்வும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்துடன் நிறைவு செய்யப்படுவது வழக்கம். ஏனென்றால், மழைக்காலம் தொடங்குவதால், அகழாய்வுப் பணிகள் நிறுத்தப்பட்டு, குழிகள் அனைத்தும் மூடப்பட்டு, ஆவணமாக்கல் பணிகள் மட்டுமே நடைபெறும்.
![கீழடி 7ஆம் கட்ட அகழாய்வு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-mdu-01-keezhadi-7th-phase-sep-closed-script-7208110_26082021150741_2608f_1629970661_32.png)
அதனடிப்படையில், தற்போது நடைபெற்றுவரும் ஏழாம்கட்ட அகழாய்வுப் பணிகள் வருகின்ற செப்டம்பர் மாதத்துடன் நிறைவுசெய்யப்பட உள்ளதாகத் தமிழ்நாடு தொல்லியல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இடைப்பட்ட காலத்தில் அகழாய்வுக் கள பொறுப்பாளர்கள் தொல்லியல் பொருள்களைப் பட்டியலிட்டு ஆவணப்படுத்தும் பணியை மேற்கொள்வர் என்றும், அகழாய்வுக்கான அறிக்கைத் தயாரிக்கும் பணியிலும் ஈடுபடுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் எட்டாம்கட்ட அகழாய்வுப் பணிகளைத் தொடர்வது குறித்து தமிழ்நாடு அரசே முடிவுசெய்யும். அது குறித்து தேவையான அறிக்கை தொல்லியல் துறை சார்பாக வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: வாகை மரத்திலிருந்து பீய்ச்சியடித்த நீர்: வாளி வாளியாய் பிடித்துச் சென்ற மக்கள்