மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி இயக்குனரகத்தில் முறைகேடாக போலி ஆவணங்கள் தயாரித்து மதிப்பெண் பட்டியல், பாடநெறி நிறைவுச் சான்றிதழ்கள் வழங்கி அரசிற்கு ஒரு லட்சத்து முப்பத்து ஒன்பதாயிரத்து எழு நூறு ரூபாய் வரை இழப்பீடு ஏற்படுத்திய 8 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
குறிப்பாக, இதன் மூலம் 858 மாணவர்கள் வரை முறைகேடான வழியில் போலியாக பட்டம் பெற்றிருக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டுவரும் காமராஜர் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்குனரகம் சுமார் 1.20 லட்சம் மாணவர்களைக் கொண்டது.
இந்த தொலைதூரக் கல்விப் பட்டங்கள், புது தில்லி பல்கலைக்கழக மானியக் குழுவால் (UGC) அங்கீகரிக்கப்பட்டு மத்திய மற்றும் மாநில அரசுகளின் வேலைவாய்ப்பிற்குத் தகுதியானவை என சான்று அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 99 மதுரை காமராஜர் பல்கலைக்கழக கல்வி மையங்களும், பிற மாநிலங்களில் 133 மையங்களும் இயங்கி வருகின்றன.
தொலைதூரக் கல்வி இயக்குநரகத்தில் சேர்க்கைக்கு, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அருகில் உள்ள மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் கல்வி மையத்தின் ஒருங்கிணைப்பாளரிடம் நேரிலோ (அ) தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.
பதிவு எண், முகவரி, அனுமதிக்கப்பட்ட ஆண்டு, வங்கியின் பெயர் மற்றும் இடம், பணம் செலுத்திய தேதி மற்றும் தொகை பற்றிய விவரங்களைக் கொடுத்து, டிமாண்ட் டிராஃப்ட் (DD) இயக்குனருக்கு அனுப்பப்பட்ட கவரிங் லெட்டருடன் அனுப்பப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தொலைதூர கல்வியில் மாணவர்கள் தேர்ச்சி மற்றும் சேர்க்கையில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணை நடத்தினா். இதில் கடந்த 2017-2018ஆம் ஆண்டில், 34 பிற மாநில பி.காம்., மாணவர்களின் பதிவு மற்றும் கல்வி கட்டணத்திற்கான டிமாண்ட் டிராப்ட் தொகை, காமராஜர் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்குனர் கணக்கில் வரவு வைக்கப்படவில்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்குனரிடம் இருந்து 16,580 மாணவர்கள் பதிவு மற்றும் கல்விக் கட்டணம் செலுத்திய விவரம் மற்றும் டிடி விவரங்கள் பெறப்பட்டன. அந்த விவரங்களிலிருந்து, பல மாணவர்களுக்குச் செலுத்தப்பட்ட பதிவு மற்றும் கல்விக் கட்டணமாக ஒரே மாதிரியான டிமாண்ட் டிராப்ட் எண் பயன்படுத்தப்பட்டதும், அதுவே உள்ளிடப்பட்டதும் விசாரணையில் தெரிய வந்தது. 16,580 பிற மாநில பி.காம்., மாணவர்களில் 858 செல்லாத டி.டி.க்கள் மதுரை காமராஜர் பல்கலைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இதனை, சேர்க்கை பிரிவு கண்காணிப்பாளர் சத்தியமூர்த்தி, தவறான டிடியை சரிபார்க்கவில்லை. மேலும் அவர் அதை பல்கலைக்கழக கணக்கிற்கு அனுப்பவுமில்லை. மேலும், பதிவு மற்றும் கல்விக் கட்டணத்தைச் செலுத்தாத 342 மாணவர்களுக்கு பாடநெறி நிறைவுச் சான்றிதழை வழங்கியதும் இதனால், அரசுக்கு 1 லட்சத்தி 39 ஆயிரத்தி 700 ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டதும் தெரிய வந்துள்ளது.
போலியான மதிப்பெண் சான்றுகளை உருவாக்கி தேர்ச்சி பெறாதவர்களை தேர்ச்சி பெறச் செய்து அவர்களுக்கு பட்டச் சான்றிதழ் வழங்கியதும் தெரியவந்துள்ளது.
8 பேர் மீது வழக்குப்பதிவு: இதனையடுத்து போலி ஆவணங்கள் மற்றும் போலியான டிடி ஆகிய முறைகேடுகளில் ஈடுபட்டதாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைதூர கல்வியியல் இயக்குனரக முன்னாள் கூடுதல் தேர்வு கட்டுப்பாட்டாளர் ராஜராஜன், முன்னாள் கண்காணிப்பாளர் சத்தியமூர்த்தி, கம்யூட்டர் புரோகிராமர் கார்த்திகை செல்வன், முன்னாள் கண்காணிப்பாளர் ராஜபாண்டி மற்றும் கேரள மாநிலத்தில் உள்ள காமராஜர் பல்கலைக்கழக தொலைதூர கல்வி ஒருங்கிணைப்பு தனியார் கல்வி நிறுவனங்களை சேர்ந்த ஜிஜி, அப்துல் அஜிஸ், சுரேஷ், ஜெயபிரகாஷன் ஆகிய 8 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதில் முதல் குற்றவாளியான ராஜராஜன் கடந்த ஆண்டு உயிரிழந்த நிலையில் மற்ற 7 பேரிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது.
இதையும் படிங்க: துணைவேந்தர் நியமனம் தொடர்பாக தீர்மானம் கொண்டு வந்ததால் மிரட்டல் வருகிறது என புகார்