இது குறித்து நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த பெரியநம்பி நரசிம்ம கோபாலன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு பொது நல மனு தாக்கல் செய்திருந்தார் அதில், பேரறிஞர் அண்ணா நினைவு தினத்தன்று, கோயில் நிர்வாகத்தின் பணத்தைக் கொண்டு கோயில்களில் சிறப்பு அன்னதானம் வழங்க தடை விதிக்க வேண்டும், கோயில் பணத்தில் இலவச வேட்டி சேலைகளும் வழங்கக் கூடாது என கோரிக்கை வைத்திருந்தார்.
காரணம் என்னவென்றால் பேரறிஞர் அண்ணா இந்து சமயத்தின் மீதும், இந்து கடவுள்களின் மீதும், இந்து கோயில்கள் மீதும் நம்பிக்கை இல்லாதவர். இந்து மதத்தின் மீது நம்பிக்கை இல்லாத ஒருவரின் நினைவு நாளில் இந்து பணத்திலிருந்து கோயில்களில் எவ்வாறு அன்னதானம் வழங்கலாம்?
மேலும் தான் ஒரு இந்து அல்ல என்பதையும் பல இடங்களில் அண்ணா சுட்டிக் காட்டியுள்ளார். உருவ வழிபாடு பல தெய்வ வழிபாடு ஆகியவற்றை தனது புத்தகங்களில் சாடியுள்ளார். மேலும் ஒரே கடவுள், உருவமற்ற வழிபாடு ஆகியவற்றிற்கு ஆதரித்தவருக்கு இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோயில்களில் ஆண்டிற்கு இரண்டு நாட்கள் சிறப்பு அன்னதானம் நடைபெறுகிறது.
எனவே, பேரறிஞர் அண்ணா நினைவு நாள் அன்று இந்து கோயில்களில், கோயில் பணத்தில் இருந்து சிறப்பு அன்னதானம், இலவச வேட்டி , சேலை வழங்குவது ஆகியவற்றிற்கு தடைவிதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் இது குறித்து கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.