மதுரை: அருந்ததியர் இன மக்களுக்கான உள் இட ஒதுக்கீட்டினை முறையாக பின்பற்ற கோரிய வழக்கில் கூடுதலாக ஆவணங்களை சேர்க்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த கார்த்திகேயன் (எ) பேரறிவாளன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார்.
அதில் "நான் அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்தவன். எனது 3ஆவது மகள் செல்வி 12ஆம் வகுப்பில் 4 பாடத்தில் (Cut off) 400/234 மதிப்பெண் பெற்றுள்ளார். தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை படிப்பில் சேருவதற்காக விண்ணப்பித்துள்ளார். வேளாண்மைத் படிப்பிற்காக அருந்ததியின மக்களுக்கு 3% உள்இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால் உள் இட ஒதுக்கீட்டின் கீழ் எனது மகளுக்கு தற்போதுவரை அழைப்பிதழ் வரவில்லை. மேலும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில், கடந்த ஐந்தாண்டுகளில் அருந்ததியர் இன மக்களுக்கான 3% உள் இட ஒதுக்கீட்டு முறையை சரியாக பின்பற்றப்படுவதில்லை. இதனால் எனது மகள் மட்டுமல்லாமல், பிற மாணவர்களும் பாதிப்படைந்து வருகின்றனர்.
எனவே அருந்ததிய இன மக்களுக்கான 3% உள் இட ஒதுக்கீட்டினை முறையாகப் பின்பற்றவும், கடந்த 5 ஆண்டுகள் உள் இட ஒதுக்கீட்டை முறையாக பின்பற்றப்படாத அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தனது மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் வேல்முருகன், இளங்கோவன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் மனுதாரரின் மகளுக்கு மதுரை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் ஒரு இடத்தை ஒதுக்கி வைக்கவேண்டும். அவ்வாறு அங்கு அனைத்து இடங்களும் முழுமையாக நிரம்பி இருந்தால், பிற மாவட்டத்திலுள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் ஒரு இடத்தை ஒதுக்கி வைக்க இடைக்கால உத்தரவிட்டனர்.
மேலும், மனுதாரர் தரப்பில் கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஜனவரி 4ஆம் தேதி ஒத்திவைத்தனர்.