சென்னையைச் சேர்ந்த ஸ்ரீதரன், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல்செய்திருந்தார். அந்த மனுவில், "கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயில் 108 வைணவ திவ்ய தேசங்களில் புகழ்பெற்ற ஒன்றாக உள்ளது.
ஆதிகேசவ பெருமாள் கோயிலில் 2015ஆம் ஆண்டு கோயில் மறுசீரமைப்புப் பணிகள் தொடங்கிய நிலையில் அங்குள்ள சுவர்கள், தூண்கள், கோயில் கோபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முரள் பெயிண்ட் அடிக்கப்பட்டுவருகிறது.
இந்தப் பெயிண்ட் தரமற்ற இருப்பதாகப் பக்தர்கள் புகார் அளித்துள்ளனர். பழமையான திருக்கோயில்களில் பெயிண்ட் பச்சிலைகள் சேர்க்கப்பட்டு பயன்படுத்தப்படுவது வழக்கமாக உள்ள நிலையில் திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவிலில் அதுபோல செய்யப்படாமல் பழமையான தூண்கள், கோபுரங்களில் பெயிண்ட் அடிக்கப்பட்டுவருவதால் அதன் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.
மேலும் கோயில் கருவறையிலுள்ள தரைகளில் கிரானைட் கல் பதித்துவருகின்றனர். கோயிலில் ஐந்து நேரம் எண்ணெய்யினால் பூஜை நடைபெறுகிறது. இதனால் பக்தர்கள் கிரானைட் கற்களில் நடந்துசெல்வது சிரமத்திற்கு உள்ளாக வாய்ப்பு உள்ளது.
இது குறித்து கோயில் நிர்வாகம், இந்து அறநிலையத் துறையிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே கோயிலில் பழமையான முறையில் பெயிண்ட் அடிக்கவும் பழமை மாறாமல் கருவறையில் கிரானைட் பதிக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ஆய்வுசெய்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.