ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என இருவரிடம் வாங்கிய காசுக்காக இரண்டு சின்னத்திலும் வாக்கு செலுத்திவிட்டு அதை விளக்கிக் காண்பிக்கும் மூதாட்டியின் காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலம் மேட்டுத்தெருவில் அமைந்துள்ள நான்காவது வார்டில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதே வார்டைச் சேர்ந்த லட்சுமி என்கிற மூதாட்டி தான் வாக்கு செலுத்திய விவரத்தை வெளியில் வந்து வேட்பாளர்களின் முகவரிகளிடம் விளக்குகின்ற காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
நடிகர் வடிவேலு நடித்த அன்பு திரைப்படத்தில் இடம்பெற்ற நகைச்சுவைக் காட்சி போன்றே நிஜத்திலும் நடந்திருக்கிறது. வாக்குச் செலுத்தியதை வெகுளித்தனமாக விளக்கும் மூதாட்டி லட்சுமி தனியார் உணவு விடுதியில் விறகு அள்ளுவது, மசாலா அரைப்பது போன்ற வேலைகளைச் செய்துவருகிறார்.
மதுரை மாவட்டம் மேலூர் ஒன்றியத்திற்குள்பட்ட அரிட்டாபட்டி ஊராட்சியில் 79 வயது மூதாட்டி வீரம்மாள் அழகப்பன், தேர்தலில் வென்று சாதனை படைத்திருக்கும் வேளையில், இன்னமும் தங்களுக்குரிய வாக்குகளை செலுத்துவதிலே போதுமான விழிப்புணர்வின்றி இருக்கும் லட்சுமி போன்ற பாமரர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
எது எப்படியிருப்பினும் மக்களின் வாக்கைப் பெற்றுவிட்டு வேட்பாளர்கள் வேண்டுமானால் ஏமாற்றலாம். ஆனால் வாக்காளர்கள் ஒருபோதும் ஏமாற்றமாட்டார்கள் என்ற உண்மை மீண்டும் நிரூபணமாகியுள்ளது.
இதையும் படிங்க: இந்தியாவின் மாபெரும் கனவு சாவித்ரிபாய் பூலே!