ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணையின் நீர்மட்ட கொள்ளளவு 120 அடியாகவும், நீர் இருப்பு 32.8 டிஎம்சியாகவும் உள்ளது. அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால், ஆற்று பாசனம் மூலம் 16 மெகா வாட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. தற்போது அணையில் 80 அடி நீர்மட்டம் இருந்தாலும், பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் அணையில் இருந்து தினந்தோறும் 16 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மின் உற்பத்தி நிறுத்தம் காரணாக பவானிசாகர், கோபிசெட்டிபாளையம், ஈரோடு போன்ற இடங்களுக்குத் தேவையான மின்சாரம், பிற பகுதிகளில் இருந்து பெற வேண்டியுள்ளது.
மேலும், பவானிசாகர் அணையில் தயாரிக்கும் மின்சாரத்தால் தடையின்றி பவானிசாகர் நகர்ப்பகுதி செயல்பட்டது. ஆனால், தற்போதைய சூழ்நிலையில் சற்று சிரமமாக இருந்து வருகிறது.
இந்நிலையில், இன்று (ஜூன் 27) பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 80.68 அடியாகவும், நீர் இருப்பு 16 டிஎம்சி யாகவும் உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 347 கன அடியாக உள்ள நிலையில், அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் 100 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.