கடம்பூர் மலைப்பகுதி பராபெட்டா காப்புக்காடு புறம்போக்கு நிலத்தில் 20 வயது யானையைக் கொன்று தந்தம் திருடிய வழக்கில், அம்மலைப்பகுதியைச் சேர்ந்த தாசன் மகன் வீரன்(55), பத்ரன் மகன் வெள்ளையன்(35), மற்றொரு பத்ரன் மகன் மூர்த்தி மற்றும் சிவகங்கையைச் சேர்ந்த ஜெகநாதன் மகன் பிரேம்குமார் ஆகியோருக்கு தொடர்புள்ளது எனக் கண்டறியப்பட்டது. இவ்வழக்கில் தனிப்படை அமைக்கப்பட்டு நடந்த விசாரணையில் வீரன், வெள்ளையன் ஆகியோரை வனத்துறையினர் கைதுசெய்து கடந்த 5ஆம் தேதி கோபி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் முன்னிறுத்தினர். தப்பியோடிய மூர்த்தி, பிரேம்குமார் ஆகியோரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.
அதனைத் தொடர்ந்து இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான வீரனை வனத்துறையினர் காவலில் எடுத்து விசாரித்தனர். வீரன் அளித்த வாக்குமூலத்தின்படி, கடம்பூர் 12வது மைல் கல், மூங்கில் தூருக்கு அடிப்பகுதியில் வனத்துறையினர் தோண்டிப் பார்த்தனர். அங்குப் பையில் தந்தங்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அதனை ஆய்வுசெய்ததில் கொல்லப்பட்ட யானையின் இரு தந்தங்கள் என்பது உறுதியானது. இதையடுத்து தந்தங்களைப் பறிமுதல் செய்த வனத்துறையினர் கோபி குற்றவியல் நீதிமன்றத்தில் வீரனை முன்னிறுத்தி தந்தங்களை ஒப்படைத்தனர்.