ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள தொட்டம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த அப்துல் கபூர் என்பவரின் மகள் சாஹிதா பானு என்ற பெண்ணுக்கும், பெருந்துறை சீனாபுரம் பகுதியைச் சேர்ந்த முகம்மது பாஷா என்பவரது மகன் முபாரக் என்பவருக்கும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
இந்நிலையில் கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக திருமணங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டதால் சத்தியமங்கலம் அருகே உள்ள மணமகள் சாஹிதா பானு இல்லத்தில் இன்று எளிய முறையில் நிக்காஹ் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மணமகன் வீட்டைச் சேர்ந்த 10 பேரும் மணமகள் வீட்டைச் சேர்ந்த 10 பேரும் என 20 பேர் மட்டுமே கலந்துகொண்டனர்.
இதைத்தொடர்ந்து திருமணத்திற்கு வந்த அனைவருக்கும் சானிடைசர் பயன்படுத்தி கை கழுவ ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மணமகன், மணமகள் இருவரும் சானிடைசர் கொண்டு கைகளைக் கழுவியதோடு திருமணத்தில் பங்கேற்ற அனைவரும் மாஸ்க் அணிந்திருந்தனர்.