கோபிசெட்டிபாளையம் சட்டப்பேரவைத் தொகுதியில் வளர்ச்சித்திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கதிரவன் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழ்நாடுப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், துறை வாரியாக நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்கள் குறித்தும், நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் குறித்தும் ஆலோசனை மேற்கொண்டார். புதிய திட்டங்கள் குறித்து அலுவலர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுவதில் உள்ள தடைகள் குறித்தும், அதைக் களைவது குறித்தும் ஆலோசனையில் ஈடுபட்டார்.
பின்னர் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில் வசதி படைத்தவர்கள் ஒரு பள்ளியையாவது தத்தெடுக்கவேண்டும். குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யவேண்டும் என்றால் மழை பெய்யவேண்டும். மழை பெய்ய மரங்கள் வளர்க்கவேண்டும் என்ற நோக்கில் மாணவர்கள் மரம் வளர்க்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. மாணவர்கள் மரங்களை நடுவது மட்டுமல்ல... அவற்றை வளர்க்கும் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. 6 முதல் 8 வரை உள்ள வகுப்பு மாணவர்களுக்கும் பயோமெட்ரிக்முறை அமல்படுத்தப்படும், என்றார்.