ஈரோடு: மாவட்ட அதிமுக சார்பில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடந்தது.
இந்தக் கூட்டத்திற்கு மாநகர் மாவட்ட கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ராமலிங்கம் தலைமை தாங்கினார். இதில் முன்னாள் எம்எல்ஏ தென்னரசு முன்னிலை வகித்தார்.
இந்தக் கூட்டத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக அரசியலிலிருந்து ஒதுங்கி இருக்கப்போவதாக அறிவித்த சசிகலா தற்போது கட்சி நிர்வாகிகளை தொலைபேசியில் அழைத்துப் பேசிவருகிறார்.
இதன் மூலமாக கட்சியை அபகரிக்க முயற்சி செய்வதற்குக் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வது, தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் கட்சி வெற்றிக்காக பாடுபட்ட முன்னாள் முதலமைச்சரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், கூட்டணிக் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்ற அறிவுரைப்படி கரோனா நோய்த்தொற்றால் இறந்தவர்களின் இறப்புச் சான்றிதழ்களில் உண்மையான காரணத்தை குறிப்பிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.