ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகேவுள்ள கூகலூர் பேரூராட்சிக்குட்பட்ட வாய்க்கால்புதூரில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டது.
இந்த ஆழ்துளைக் கிணற்றில் இருந்து 6,7,8ஆவது வார்டுக்குட்பட்ட வாய்க்கால்புதூர் உள்ளிட்ட மூன்று கிராமங்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன் இந்த ஆழ்துளைக் கிணற்றில் பொருத்தப்பட்டிருந்த மின் மோட்டார் பழுது ஏற்பட்டது.
அதைத்தொடர்ந்து மின்மோட்டாரை பழுது பார்ப்பதற்காக பேரூராட்சி நிர்வாகம் எடுத்துச் சென்றபோது ஆழ்துளைக் கிணற்றில் இருந்து குழாய்கள் அகற்றப்பட்டு மின் வயர்கள் துண்டிக்கப்பட்டன.
இந்த ஆழ்துளைக் கிணறு வாய்க்கால்புதூர் செல்லும் சாலை ஓரத்திலேயே உள்ள நிலையில், கடந்த 6 மாத காலமாக திறந்த நிலையிலேயே உள்ளது. இந்த சாலை வழியாகவே பள்ளி குழந்தைகள் சென்று வரும் நிலையில் கால் நடை மேய்ப்பவர்களும் இந்தப் பகுதியில் அதிகளவு உள்ளனர்.
இந்த ஆழ்துளைக் கிணறு திறந்த நிலையில் உள்ளதாலும், மின்சார வயர்கள் துண்டிக்கப்பட்டதோடு, அவற்றைப் பாதுகாப்பாக மூடாமல் இருப்பதாலும், அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கிராம மக்கள் பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதையும் படிங்க: Mist in Trichy RockFort: திருச்சியில் மறைந்து போன மலைக்கோட்டை