ஈரோட்டில் தனியாருக்கு சொந்தமான 300க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் செயல்பட்டு வருகிறது. நோயாளிகளை நோய் காரணமாக மருத்துவமனைக்கு துரிதமாக கொண்டு செல்வதில் இவர்களின் பங்களிப்பு அளப்பரியது. தற்போது கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் அதிகரித்து வரும் நிலையில், சொந்த வாகனம் இல்லாத கரோனா நோயாளிகள் மருத்துவமனை செல்ல முழுக்க முழுக்க ஆம்புலன்ஸ் சேவையை மட்டுமே நம்பியுள்ளனர்.
இந்நிலையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக ஈரோட்டில் செயல்பட்டு வரும் 300-க்கும் மேற்பட்ட தனியார் ஆம்புலன்ஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். ஏற்கனவே பல மருத்துவமனைகளில் படுக்கை பற்றாக்குறை நிலவுவதால் மருத்துவமனைக்கு வெளியே ஆம்புலன்ஸில் காத்திருக்கின்றனர்.
தற்பொழுது ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக தனியார் ஆம்புலன்ஸ் சேவையும் நிறுத்தப்பட்டுள்ளதால் கரோனா நோயாளிகள் உயிரிழப்பு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் தமிழ்நாடு அரசு, தனியாக ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கும் ஆக்சிஜன் கிடைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களும், உரிமையாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் சங்க நிர்வாகி பிரபு கூறுகையில்:- ஈரோடு மாவட்ட நிர்வாகம் தனியார் ஆம்புலன்ஸ் உரிமையாளர்களுக்கு ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்யும் பட்சத்தில் கரோனா நோயாளிகளுக்கான உயிரிழப்பு தவிர்க்கப்படும் என்றும் விரைவில் ஆக்ஸிஜன் தேவையை நிறைவேற்றுமாறு கோரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க:ரூ.6 லட்சம் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்கள் வழங்கிய முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்