ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப் பகுதி கெட்டவாடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கண்ணையன். இவர் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த நிறுவனம் தயாரித்த உருளைக்கிழங்கு நடவு செய்யும் இயந்திரத்தை சோதனை அடிப்படையில் தாளவாடியில் நடவு செய்தார். இந்த இயந்திரத்தின் மூலம் தாளவாடி மலைப்பகுதியில் உள்ள மல்கொத்திபுரம் கிராமத்தைச் சேர்ந்த செல்வம் என்பவரது விவசாய தோட்டத்தில் சோதனை முறையில் உருளைக்கிழங்கு நடவு பணி நடைபெற்றது.
இந்நிலையில், டிராக்டரின் பின்புறத்தில் நவீன தொழில்நுட்பம் மூலம் தயாரிக்கப்பட்ட நடவு இயந்திரத்தில் உருளைக்கிழங்கு நடவு செய்தால், இரு புறமும் பாத்தி போல அமைத்து அதில் கிழங்கை வைத்து மண்ணால் மூடுகிறது. இந்த இயந்திரம் ஒரே சீராக உருளைக்கிழங்கை நடவு செய்கிறது. இதற்கு நடவு இயந்திரத்துடன் மூன்று தொழிலாளர்கள் மட்டும் இருந்தால் போதுமானது.
இந்த இயந்திரம் இரண்டு மணி நேரத்தில் ஒரு ஏக்கர் பரப்பளவு நடவு செய்கிறது. மனித உழைப்பை விட விரைவாக நடவு செய்வதால் நடவு நேரம், மனித உழைப்பு, செலவு குறைவதால் உருளைக் கிழங்கு விவசாயிகள் வரவேற்றுள்ளனர்.