ஈரோடு மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள கடைவீதி, துணிக்கடைகள், மளிகைக் கடைகள், தேநீரகங்கள், பேன்சி விற்பனை நிலையங்கள், உணவகங்கள், பழக்கடைகள் ஆகியவற்றின் முன்பாக வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு மக்கள் நடமாற்றத்திற்கும், வாகன போக்குவரத்திற்கும் கடுமையான இடையூறு ஏற்பட்டு வருவதாக மாவட்ட போக்குவரத்துக் காவல்துறையினருக்குப் புகார்கள் தெரிவிக்கப்பட்டன.
அதேசமயம் குறிப்பாக காலை, மாலை வேளைகளில் முக்கிய சாலைகளைப் பயன்படுத்த முடியாத அளவுக்கு வாகனங்கள் வீதிகளை அடைத்து நிற்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் இந்தப் பாதிப்புகளை நீக்கிட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து மாவட்ட போக்குவரத்துக் காவல்துறையினர் 10க்கும் மேற்பட்ட காவலர்களுடன் முக்கிய வீதிப் பகுதிகளில் தெருவை அடைத்து நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த அனைத்து வகை வாகனங்களையும் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.
மேலும் தேநீரகங்கள், உணவகங்கள் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இரண்டு சக்கர வாகனங்கள் உரிமையாளர்கள் மீது வழக்குகள் பதிவு செய்த காவல்துறையினர் அபராதங்களையும் வசூலித்தனர்.
இந்நிலையில் இன்று(செப்.16) ஒரே நாளில் கடைவீதிப் பகுதியில் மட்டும் 200க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. படிப்படியாக கடைவீதிப் பகுதி உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் சாலைகளில் வாகனங்கள் நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.