ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற விநாகயர் சிலை ஊர்வலத்திலும் பொதுக்கூட்டத்திலும் பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "கடந்த மக்களவைத் தேர்தலில் பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற திமுக கூட்டணி வேலூரில் வெறும் எட்டாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றிபெற்றது.
கல்விக்கடன், நகைக்கடன், விவசாயக் கடன் ரத்து என்பதை நம்பி முதலில் வாக்களித்த மக்கள் பின்னர் புரிந்துகொண்டதுதான் இந்த வாக்கு வித்தியாசத்திற்கான காரணம். பொதுமக்களிடம் பணம் போய் சேருவதற்கும் வாங்கும் சக்தி அதிகரிப்பதற்காகவும்தான் ரிசர்வ் வங்கியிடமிருந்து ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் பெறப்பட்டுள்ளது" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டில் பாஜக மாநிலத் தலைமையை ஏற்க 15 பேரை ஊடகங்கள் விவாதத்தின் மூலம் அடையாளம் காட்டியுள்ளது மகிழ்ச்சியை அளிப்பதாகத் தெரிவித்தார். அகில இந்திய தலைமை தக்க நேரத்தில் முடிவெடுத்து தமிழ்நாடு பாஜகவிற்கு தலைவரை நியமிக்கும் என்றும் தமிழிசை தெலங்கானா ஆளுநராக அறிவிக்கப்பட்டவுடன் தான் ஃபேஸ்புக், ட்விட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்தாகவும் அவர் குறிப்பிட்டார். செப்டம்பர் 6ஆம் தேதி சென்னையில் தமிழிசையை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்கவுள்ளதாகவும் கூறினார்.
ரஜினி பாஜக தலைவராவாரா என்ற கேள்விக்கு, அது குறித்து பேசுவதே அநாகரிகம் எனக் கூறிய ஹெச். ராஜா, ரஜினி புகழ் பெற்ற ஆளுமை மிக்க நபர்; அவர் விருப்பம் தெரிவிக்காத விஷயத்தை நாம் விவாதிக்கக் கூடாது என்றார்.
மேலும், இந்திராணி முகர்ஜி கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான நிறுவனத்தின் வங்கி கணக்கிற்கு பணப்பரிமாற்றம் செய்துள்ளது ஊர்ஜிதமாகியுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், எனவே பழிவாங்கும் விதமாக ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார் என்று கூறுவது தவறானது எனவும் தெரிவித்தார்.