ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் புயலால் பாதிக்கப்படும் இடங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் சுகாதாரத் துறை, பேரிடர் மீட்புத் துறைகள் இணைந்து எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கதிரவன், அமைச்சர் செங்கோட்டையன் நேரில் ஆய்வுமேற்கொண்டனர்.
கீரிப்பள்ளம் ஓடையைத் தூர்வாரும் பணியையும் பார்வையிட்டு வீடுகளுக்குள் மழைநீர் புகாதா வண்ணம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசனை மேற்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன், “நிவர் புயல் சேதம் ஏற்படுத்தும் முன்பே எச்சரிக்கை நடவடிக்கையாக சேதங்கள் ஏற்படக்கூடும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் முதலமைச்சர் அறிவுரை வழங்கி விரைந்து நடவடிக்கை எடுக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 628.3 மில்லியன் தண்ணீர்தான் உள்ளது. நமக்குத் தேவை 717 மில்லியன் தண்ணீர் ஆகும்.
அதற்குத் தேவையான வாய்க்கால்கள் ஓடைகள் சீரமைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து ஐந்து நாள்கள் மழை பெய்தாலும் மக்களைப் பேணிக்காக்க வருவாய்த் துறை, உள்ளாட்சித் துறை, மக்கள் நல்வாழ்வுத் துறை என அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொண்டுள்ளன.
கோபிசெட்டிபாளையம் கீரிப்பள்ளம் ஓடையில் கூடுதலாக மழை பெய்யும்போது பல நேரங்களில் வெள்ளச்சேதம் ஏற்பட்டுள்ளது. அதற்காக முதலமைச்சர் நிதி வழங்கியுள்ளார். இனிமேல் எவ்வளவு மழை பெய்தாலும் பாதிப்புகள் ஏற்படாத வகையில் தண்ணீர் கொண்டுசெல்வதற்கு மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. ரூ.11.5 கோடி நிதி ஒதுக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புயல் பொதுமக்களைப் பாதுகாக்க ஈரோடு மாவட்டத்தில் 95 இடங்கள் தேர்வுசெய்யப்பட்டுள்ளன. தேவையெனில் அவ்விடங்கள் பயன்படுத்தப்படும். 50 ஆயிரம் பேர் தங்குவற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஏரி குளங்களுக்கு முழுப் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. வருவாய்த் துறையும், பொதுப்பணித் துறையும் கண்காணித்துவருகின்றன. கொங்கு மண்டலத்தைப் பொறுத்தவரை பாதிப்புகள் ஏற்படாது. ஈரோடு மாவட்டத்தில் வெள்ளச்சேதமும் வராது, நிலநடுக்கமும் வராது புயலும் வருவதில்லை. அதனால் பொதுமக்கள் கவலைப்படத் தேவையில்லை” எனத் தெரிவித்துள்ளார்.