ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி வனப்பகுதியில் ஏராளமான சிறுத்தைகள் உள்ளன. வனத்தை ஒட்டியுயுள்ள சூசைபுரம், தொட்டகாஜனூர், பீம்ராஜ் நகர் பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாக ஆடு, மாடு, காவல் நாய் ஆகியவற்றை சிறுத்தை தாக்கிக் கொன்றுள்ளது.
இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். சிறுத்தை அச்சுறுத்தலால் இரவு நேர விவசாயப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஆடு, நாய்களை வேட்டையாடிய பின் சிறுத்தை அங்குள்ள கல்குவாரிக்குச் சென்று பதுங்கி கொள்வதை வாடிக்கையாக வைத்துள்ளது.
சிசிடிவி மூலம் கண்காணிப்பு
அதனைப் பிடிக்க வனத்துறையினரும் பல்வேறு முயற்சிகளை செய்துவருகின்றனர். அதற்காக வைக்கப்பட்டுள்ள கூண்டில் சிக்காமல், போக்கு காட்டி வருகிறது சிறுத்தை. தொடர்ந்து இப்பகுதியில் கால்நடைகளை வேட்டையாடிவருவதால் விவசாயிகள் கண்காணிப்பு கேமராக்களை வைத்து கண்காணித்துள்ளனர்.
பகல் நேரத்தில் சிறுத்தையானது கல் குவாரியில் பதுங்கிக்கொள்வதால் சிறுத்தையை பிடிக்க முடியாமல் வனத்துறையினர் திணறுகின்றனர்.
தெரு நாயை விரட்டும் சிறுத்தை
இந்நிலையில் திங்கள்கிழமை தொட்டகாஜனூரைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் விவசாய தோட்டத்தில் வைத்திருந்த கண்காணிப்புக் கேமராவை ஆய்வு செய்தபோது, அதில் சிறுத்தை நடந்து செல்லும் வீடியோ காட்சி பதிவாகியிருந்தது. அப்போது, தடுப்பு சுவருக்குள் இருந்த நாய் ஒன்று சிறுத்தையை பார்த்து குரைத்தது.
அந்த நாயை பார்த்த சிறுத்தை அதனை பிடிக்க வேகமாக விரட்டிச் செல்லும் காட்சியும் அதில் பதிவாகியிருந்தது. இதனைக் கண்ட வனத்துறையினர், சிறுத்தையைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: ஆடு,கன்றுக்குட்டியை கடித்துக் குதறிய சிறுத்தை... வனத் துறை கண்காணிப்பு