ஈரோடு: சத்தியமங்கலம் அருகே சுங்கக்காரன்பாளையம் கிராமத்தைச்சேர்ந்தவர்கள் அருள்செல்வன்-யுவராணி தம்பதியினர். இவர்களுக்கு சஞ்சய் என்ற மகனும், தர்ஷினிஸ்ரீ என்ற மகளும் உள்ளனர். யுவராணி புஞ்சை புளியம்பட்டியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் வணிக உதவியாளராக பணிபுரிந்து வந்தார்.
இவரது மகன் சஞ்சய் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். பள்ளியில் சரிவர படிக்காத சஞ்சயை அவரது தாய் யுவராணி கண்டித்து வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்பு சத்தியமங்கலம் தனியார் பள்ளியில் உள்ள ஹாஸ்டலில் சேர்த்துள்ளார்.
கடந்த இரண்டு நாட்களாக வீட்டில் இருந்த சஞ்சயை அவரது தாய், தந்தை கண்டித்து வந்ததால், இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று (அக்.12) நள்ளிரவில் வீட்டில் யுவராணி, மகன் சஞ்சய், மகள் தர்ஷினிஸ்ரீ ஆகிய மூவரும் உறங்கிக் கொண்டிருந்தனர். இதைத்தொடர்ந்து இரவு 12 மணி அளவில் சஞ்சய் தாய் மீது இருந்த ஆத்திரத்தில் தனது தாயை வீடு கட்ட பயன்படுத்தப்படும் ஹாலோ பிளாக் கல்லை எடுத்து, உறங்கிக் கொண்டிருந்த தாய் யுவராணியின் தலைமீது போட்டதில் தலையில் பலத்த ரத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். அப்போது அவரது மகள் தர்ஷினிஸ்ரீ சத்தம் போடவே சஞ்சய் வீட்டை விட்டு ஓடி தலைமறைவானான்.
இதுகுறித்து அவ்வழியாக சம்பவ இடத்திற்கு சென்ற புஞ்சை புளியம்பட்டி போலீசார் மற்றும் சத்தியமங்கலம் டிஎஸ்பி சந்திரசேகரன் ஆகியோர் விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து, ஈரோட்டில் இருந்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்ட தடயங்கள் சேகரிக்கப்பட்டன. உடலை மீட்ட போலீசார் உடற்கூராய்வுக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இதையடுத்து சிறுவன் சஞ்சயை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு, 14 வயது சிறுவன் தனது தாயின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கட்டப்பஞ்சாயத்து செய்த டிஎஸ்பி மற்றும் காவல் ஆய்வாளர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு