கேரள மாநிலம் தலைக்குளம் பகுதியைச் சேர்ந்த ரியாஸ் என்பவருக்குத் திருமணமாகி ஒரு மகள் உள்ளார். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு ரியாசை விட்டு அவரது மனைவி குழந்தையுடன் பிரிந்துசென்றார்.
இதையடுத்து ரியாஸ் பெங்களூருவில் உள்ள ஒரு உணவகத்தில் மேலாளராக வேலை பார்த்துவந்தார். இவர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு கோபிசெட்டிபாளையம் பஜனை தெருவில் ஒரு வீடு வாடகைக்கு எடுத்து வேலை தேடிவந்துள்ளார்.
இந்நிலையில் ரியாஸ் பெங்களூருவைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்துவந்தார். அந்தப் பெண்ணுக்குத் திருமணமாகிய நிலையில் ரியாஸ் நேற்றிரவு (பிப்ரவரி 17) தனது உறவினர் நிஷாத் என்பவருடன் செல்போனில் வீடியோகால் மூலம் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது தான் காதலித்த பெண் வேறு இளைஞருடன் திருமணம் செய்துகொண்டதால் என்னால் வாழ முடியவில்லை. எனவே நான் தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன் என்று கூறி உள்ளார்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர் நிஷாத், ரியாசை சமாதானப்படுத்தியுள்ளார். இதையடுத்து காணொலி அழைப்பில் பேசியபடியே ரியாஸ் தற்கொலை செய்துகொண்டார்.
இதையடுத்து அவரது உறவினர் செய்வதறியாது திகைத்து நின்றார். இந்த நிலையில் ரியாசின் செல்போன் இணைப்புத் துண்டிக்கப்பட்டது. ஆனாலும் நிஷாத் தொடர்ந்து செல்போனில் அழைத்துக் கொண்டிருந்தார்.
அந்த நேரத்தில் வீட்டின் அருகிலிருந்தவர்கள் நீண்ட நேரமாக ரியாஸ் அறையில் செல்போன் ஒலித்துக் கொண்டிருந்ததால், அங்குச் சென்று பார்த்தார். அப்போது ஜன்னலைத் திறந்து பார்த்தபோது தற்கொலை செய்துகொணடிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் இது குறித்து கோபிசெட்டிபாளையம் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பின் விரைந்துவந்து ரியாசை மீட்டு, கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அப்போது அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து கோபிசெட்டிபாளையம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: மனைவி, 2 மகள்களின் தலையில் கல்லைப் போட்டுக் கொன்ற தந்தை