சத்தியமங்கலத்தில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கத்தில் வாரந்தோறும் வாழைத்தார்கள் ஏல முறையில் விற்பனை செய்யப்படுகிறது. அதற்காக சத்தியமங்கலம், பவானி சாகர், புஞ்சைபுளியம்பட்டி சுற்றுவட்டாரங்களில் உள்ள விவசாயிகள், தங்களது தோட்டத்தில் விளையும் வாழைத்தார்களை அறுவடை செய்து விற்பனைக்குக் கொண்டுவருவர்.
கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வியாபாரிகள் வந்து ஏலம் எடுத்து வாழைத்தார்களை வாங்கிச்செல்வது வழக்கம். அந்தவகையில் தற்போது சங்க வளாகத்தில் நடைபெற்ற ஏலத்திற்குப் பூவன், கதளி, நேந்திரன், செவ்வாழை, ரஸ்தாலி, ரொபஸ்டா, மொந்தன், பச்சை நாடன், தேன்வாழை உள்ளிட்ட பல்வேறு ரகங்களைச் சேர்ந்த ஐந்தாயிரத்து 180 வாழைத்தார்கள் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டது.
இதில்,
- பூவன் தார் ஒன்றுக்கு ரூ.160 முதல் ரூ.610 வரையிலும்,
- செவ்வாழை ரூ.115 முதல் ரூ.680 வரையிலும்,
- ரஸ்தாலி ரூ.135 முதல் ரூ.665 வரையிலும்,
- ரொபஸ்டா ரூ.115 முதல் ரூ.480 வரையிலும்,
- மொந்தன் ரூ.85 முதல் ரூ.485 வரையிலும்,
- தேன்வாழை ரூ.185 முதல் ரூ.810 வரையிலும்,
- பச்சை நாடன் ரூ.125 முதல் ரூ.490 வரையிலும்,
- கதளி கிலோ ரூ.15 முதல் ரூ.30 வரையிலும்,
- நேந்திரன் கிலோ ரூ.14 முதல் ரூ.35 வரையிலும்
விலை போனது. மொத்தம் ஐந்தாயிரத்து 180 வாழைத்தார்கள் ஏழு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது. ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு வாழைத்தார்கள் வழக்கத்தைவிட அதிக விலைக்கு விற்பனையாகும் என நினைத்து, வாழைத்தார்களை விற்பனைக்குக் கொண்டுவந்த விவசாயிகள் அதிக விலை கிடைக்காததால் ஏமாற்றமடைந்தனர்.