எண்ணெய் நிறுவனங்கள் விவசாய விளைநிலங்கள் வழியாக பெட்ரோலிய குழாய்களைப் பதித்து, அதன் மூலம் எண்ணெய்யைக் கொண்டு செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாய நிலங்களின் பரப்பு வெகுவாகக் குறைந்து வரும் நிலையில், இதுபோன்ற நடவடிக்கையை அரசுகள் கைவிட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் பெட்ரோலிய குழாய்களை அமைத்திட, ஈரோடு மாவட்டம் முழுவதும் விவசாய நிலங்களை தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனைக் கண்டித்து மொடக்குறிச்சி அருகேயுள்ள அய்யக்கவுண்டன்பாளையம் வாய்க்கால் மேடு பகுதியில் திரண்ட 100க்கும் மேற்பட்ட விவசாயிகள், விவசாய நிலங்களில் இறங்கி, விளைநிலங்கள் வழியாக பெட்ரோலிய குழாய்கள் பதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விளைநிலங்கள் வழியாக பெட்ரோலிய குழாய்களை அமைத்திடாமல், சாலையோரமாக குழாய்களைப் பதிக்கவும் வலியுறுத்தி அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். மேலும், விவசாய நிலங்களைப் பாதுகாத்திட நடவடிக்கை எடுக்காமல், அதனை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் மத்திய, மாநில அரசுகளின் செயலை கண்டிப்பதுடன், விளைநிலங்கள் வழியாக எந்தத் திட்டத்திற்கும் அனுமதி வழங்கக்கூடாது என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
விவசாயிகளின் இக்கோரிக்கையை ஏற்று எண்ணெய் குழாய்களை விளைநிலங்கள் வழியாகக் கொண்டு செல்வதை கைவிடாவிட்டால், தொடர் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: சாத்தான்குளம் அருகே தோட்டத்தில் திடீர் தீ விபத்து - தென்னை மரங்கள் கருகின!