ஈரோட்டில் கடந்த 24ஆம் தேதி காலை மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட பல அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசின் இலவச மடிக்கணினியை ஈரோடு மேற்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் கே.வி. ராமலிங்கம், கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் தென்னரசு ஆகிய இருவரும் சேர்ந்து வழங்கினர். இதற்கிடையில் இலவச மடிக்கணினி கிடைக்கவில்லை என புகார் தெரிவித்து முன்னாள் மாணவ மாணவிகள் ஈரோடு கருங்கல்பாளையம், வீரப்பன் சத்திரம் ஆகிய சாலைகளில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து எம்.எல்.ஏக்களிடம் மடிக்கணினி பெறாத முன்னாள் மாணவர்கள் புகார் தெரிவித்தனர். அப்போது செய்தி சேகரித்து கொண்டு இருந்த கோவிந்தராஜ், நவீன் ஆகிய இரண்டு பேரிடமும் கே.வி ராமலிங்கத்தின் மகன் பிரித்வி உள்ளிட்ட சில அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவர்கள் இருவரின் செல்போனை பிடிங்கி சேதப்படுத்தி அவர்களை தாக்கியுள்ளனர்.
இதில் காயமடைந்த இருவரும் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதன் பின்னர் பத்திரிக்கையாளர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசனிடம் புகார் மனு கொடுத்ததையடுத்து, பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல் நடத்திய பிரித்வி உட்பட நால்வர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.