ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குள்பட்ட பவானிசாகர் வனச்சரகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. தற்போது வனப்பகுதியில் நிலவிவரும் கடும் வறட்சியால் தீவனத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
மேலும் வனத்தில் உள்ள நீர்நிலைகளும் வற்றிப்போயின. இதனால் காட்டு யானைகள் தீவனம், தண்ணீர்த் தேடி பவானிசாகர் அணையின் நீர்தேக்கப் பகுதிக்கு பகல் நேரத்திலேயே படையெடுக்கின்றன.
காராச்சிக்கொரை வனப்பகுதியிலிருந்து வெளியேறிய ஏழு காட்டு யானைகள் பவானிசாகர் அணையின் கரைப் பகுதியில் முகாமிட்டு பசுந்தீவனங்களை மேய்கின்றன.
இதனால் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்பவர்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்று வனத் துறையினர் அப்பகுதியினருக்கு எச்சரிக்கைவிடுத்துள்ளனர்.