சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான யானைகள் உள்ளன. யானைகளின் முக்கிய வழித்தடமாக உள்ள ஆசனூர் சாலையில் காய்கறி, சரக்கு வாகனங்கள் செல்கின்றன. யானைகள் அடிக்கடி தீவனம், நீர் தேடி சாலையைக் கடந்து செல்வது வழக்கம்.
கடந்த சில நாட்களாக தமிழ்நாடு-கர்நாடக எல்லை காரப்பள்ளம் சோதனைச்சாவடி அருகே கரும்புகளை தின்பதற்காக யானைகள் குட்டியுடன் சாலையில் உலா வருவதும் வாகனங்களை வழிமறைத்து கரும்புகளை தின்பதும் தொடர்கதையாகி வருகின்றன. இந்த நிலையில் கர்நாடக மாநிலம், சாம்ராஜ்நகரில் இருந்து ஈரோட்டுக்கு சர்க்கரைவள்ளிக்கிழங்கு பாரம் ஏற்றிச் சென்ற சரக்கு வேன், ஆசனூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது.
அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானைகள் சரக்கு வேனை வழிமறித்து, சரக்கு வாகனத்தில் கரும்பு உள்ளதா என தேடியது. கரும்பு இல்லாததால் ஆத்திரமடைந்த யானைகள் சரக்கு வாகனத்தை தும்பிக்கையால் தள்ளி ஆட்டியது.
இதில் முன்பக்க கண்ணாடி உடைந்தது. அச்சமடைந்த ஓட்டுநர் அங்கிருந்து குதித்து தப்பி ஓடி உயிர் தப்பினார். கரும்பு இல்லாத காரணத்தால் யானைகள் சரக்கு வேனை தும்பிக்கையால் அடித்து சேதப்படுத்தியதுடன் மூட்டையிலிருந்த கிழங்குகளை யானைகள் தின்றன. யானைகளின் அட்டகாசத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: AKவின் மோட்டார் சைக்கிள் டைரீஸ் - வைரலாகும் புகைப்படம்