ஈரோடு மாவட்டத்திலுள்ள எட்டு சட்டப்பேரவைத் தொகுதிகளில் அரசு சார்பில் நிறைவேற்றப்பட்டுள்ள திட்டப்பணிகளைத் திறந்துவைத்திடவும், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டிடவும், அரசுத் துறைகள் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கிடவும், மாவட்ட வளர்ச்சித்திட்டப் பணிகள் மற்றும் கரோனா தடுப்புப் பணி ஆய்வுக் கூட்டங்களிலும் பங்கேற்க முதலமைச்சர் கே. பழனிச்சாமி நாளை ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வருகை தரவுள்ளார்.
அவர் வருகைக்கான முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.சி. கருப்பணன் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், ”நாளை ஈரோடு வருகை தரவுள்ள முதலமைச்சர், 151 கோடியே 52 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்டங்களை நிறைவேற்றி ஆய்வுக் கூட்டத்தில் முக்கிய முடிவுகளை எடுக்கவுள்ளார்.
மேலும், 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 34 ஆயிரத்து 812 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை. அவர்கள் அனைவரும் ஜூலை 27ஆம் தேதி தேர்வு எழுதலாம் என்று ஏற்கனவே அரசு கூறியுள்ளது. அவர்களின் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும். எட்டு லட்சம் மாணவர்கள் நலனைக் கருத்தில்கொண்டுதான் பள்ளிக்கல்வித் துறை செயல்பட்டுவருகிறது” என்றார்.