ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அடர்ந்த வனப்பகுதியின் மத்தியில் அமைந்துள்ளது தெங்குமரஹாடா கிராமம். கிராமத்தை சுற்றிலும் மாயாறு ஓடுவதால் பரிசல் மூலம் மட்டுமே ஆற்றைக் கடந்து கிராமத்துக்கு செல்ல இயலும். சுமார் 1500 பேர் வசிக்கும் இந்த கிராமத்திற்குள் பொதுமக்களே எளிதாக நுழைய முடியாத நிலையில் இங்கு கரோனா தொற்று பரவியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு காய்ச்சல், சளியால் பாதிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்டோருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 2 குழந்தைகள், 10 பெண்கள், 13 ஆண்கள் என 25 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாக தெங்குமரஹாடா ஆரம்ப சுகாதார நிலையம் தெரிவித்தது. இவர்களில் மூன்று பேர் சிகிச்சைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
லேசான அறிகுறிகளுடன் பாதிக்கப்பட்டோர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நோய் தொற்று காரணமாக கிராமத்தில் தொடர்பில் உள்ள அனைவருக்கும் பரிசோதனை செய்யும் பணி நடந்து வருகிறது. மேலும் கிராமத்தில் கிருமி நாசனி தெளித்து நோய் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஊராட்சி மன்றத் தலைவர் மனோகரன் தெரிவித்துள்ளார்.
இந்த கிராமத்திலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியாற்றிய ஜெயமோகன் என்பவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இவரது இறப்பு இக்கிராமத்தினருக்கு மட்டுமல்லாது தமிழ்நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியது. ஜெயமோகனின் இடத்தை இளம் மருத்துவரான அருண் பிரசாத் நிரப்பியுள்ளார். அருண் பிரசாத் எங்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் என கிராம மக்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர். கடந்த ஓராண்டாக இரவு, பகல் பாராது தனது பணிக்கு தன்னையே அர்ப்பணித்து வரும் அருண் பிரசாத்தின் சேவை தற்போதைய சூழலில் மும்முடங்கு ஆகியுள்ளது.
இந்தக் கிராமத்தில் 25 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவர்களை இவரே மாயாற்றைக் கடக்க வைத்து 100 கி.மீ தொலைவுக்கு அப்பால் உள்ள கோத்தகிரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். நள்ளிரவில் யாரேனும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டால் உடனே இவர் நோயாளிகளின் வீட்டிற்கு புறப்பட்டு சென்று சிகிச்சை அளித்துவருகின்றார். 25 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டாலும் கிராமத்தினர் வழக்கம் போல் தங்களது வேலையை செய்து வர அருண்பிரசாத் எனும் நம்பிக்கை தான் காரணம்.
இதையும் படிங்க: 'கரோனாவுக்கு போட்டியாக புதிய நோய்' - கொள்ளை நோயான மியூகோர்மைகோசிஸ்