கரோனா நோய்ப் பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஆகஸ்ட் மாதம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை அன்று எவ்வித தளர்வுகளுமின்றி முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.
இந்த மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையான இன்று (ஆகஸ்ட் 9) வழக்கத்தை விடவும் கூடுதல் காவல்துறையினரின் பாதுகாப்புடன் எவ்வித தளர்வுகளுமின்றி ஈரோடு மாவட்டம் முழுவதும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
மாநகரத்தில் வழக்கமாக மக்கள் அதிகம் கூடும் முக்கியப் பகுதிகள், பிரதான சாலைப் பகுதிகள் காவல்துறையினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. மாவட்டத்தில் மொத்தமுள்ள 135 சோதனைச்சாவடிகள், மாநில, மாவட்ட எல்லைப் பகுதிகளில் கூடுதல் காவலர்களுடன் கண்காணிப்புப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இ-பாஸ் இன்றி எல்லைப் பகுதிகள், சோதனைச் சாவடிகளைக் கடப்பதற்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வருவதால் இ-பாஸ் இல்லாமல் வருபவர்கள் காவல்துறையினரால் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.
அதே சமயம் மாநகரம் முழுவதும் பெட்ரோல் பங்குகள், மதுபானக் கடைகள், காய்கறிச் சந்தைகள் உள்ளிட்ட அனைத்து வகை வியாபார நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளதால், அத்தியாவசியக் காரணங்களின்றி வீடுகளை விட்டு வெளியேறி வாகனங்களில் சுற்றுபவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருவதால் வாகனப் போக்குவரத்தும் வெகுவாகக் குறைந்துள்ளது.