ஈரோடு: நஞ்சை ஊத்துக்குளியில் தனியார் எண்ணெய் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு 1000-க்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் பிகார் மாநிலம், கிழக்கு செம்பரம் மாவட்டம், பக்ரிகாயல் அருகே உள்ள ராம்குருவா பகுதியைச் சேர்ந்த கமோத்ராம் என்பவர் இரவுப் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, பொருள்களை ஏற்றிச்செல்வதற்காக தனியார் டேங்கர் எதிர்பாராத விதமாக லாரியின் பின்சக்கரத்தில் மோதி விபத்து ஏற்பட்டதில், கமோத்ராம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல ஆலை நிர்வாகத்தினர் முயன்றனர். அப்போது அங்குவந்த வடமாநிலத் தொழிலாளர்கள் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கலவரம்: இதுகுறித்து தகவலறிந்த மொடக்குறிச்சி காவல் ஆய்வாளர் தீபா மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்குச்சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால், வடமாநிலத் தொழிலாளர்கள் உடலை எடுக்கவிடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத்தொடர்ந்து சுமார் நூற்றுக்கணக்கான வடமாநிலத் தொழிலாளர்கள் கையில் உருட்டுக்கட்டை, கற்களை எறிந்து திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் தனியார் ஆயில் மில் நிறுவனத்திற்குள் வடமாநிலத் தொழிலாளர்களுக்கும், காவலர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதில் நிறுவனத்தின் முன்புள்ள பாதுகாப்பு அறை அடித்து நொறுக்கப்பட்டது. அப்போது, பாதுகாப்புப் பணியில் இருந்த மொடக்குறிச்சி காவல் ஆய்வாளர் தீபா, காவல் உதவி ஆய்வாளர் பழனிச்சாமி, காவலர்கள் பிரகாஷ், கார்த்தி உள்ளிட்ட ஏழு காவலர்கள் காயம் அடைந்தனர். அவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணை: அதனைத்தொடர்ந்து காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் ஜானகிராமன், பாலாஜி, உதவி காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயல், காவல் ஆய்வாளர்கள் என 500-க்கும் மேற்பட்ட காவலர்கள் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து உடலை ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல முயன்றபோது, உடலை எடுக்கவிடாமல் வடமாநிலத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட வட மாநிலத்தொழிலாளர்களை காவலர் வாகனங்களில் ஏற்றி விசாரணைக்காக அழைத்துச்சென்றனர். வடமாநிலத் தொழிலாளர்கள் நடத்திய கலவரத்தில் பாதுகாப்புப்பணிக்காக வந்திருந்த மூன்று காவலர்களின் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இச்சம்பவம் குறித்து மொடக்குறிச்சி காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இக்காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. மேலும், கலவரத்தில் ஈடுபட்ட 40 வடமாநிலத் தொழிலாளர்களை காவலர்கள் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: 'காவலர்களுக்கு டிஜிபி சைலேந்திர பாபுவின் முக்கிய அறிவுரை'