ஈரோடு: சத்தியமங்கலம் சுற்றுவட்டாரத்தில் அத்திப்பண்ணகவுண்டர் புதூர், சதுமுகை, பெரியகொடிவேரி ஆகிய பகுதிகளில் செங்கல் சூளைகள் அதிகளவில் உள்ளன. இங்கு தயாரிக்கும் செங்கல் பிற மாவட்டங்களில் நடைபெறும் கட்டுமானப் பணிக்கு அனுப்பப்படுகின்றன.
தற்போது செங்கல் தயாரிக்க தேவைப்படும் செம்மண்ணை எடுக்க 17 ஆவணங்களை சமர்ப்பிக்க வருவாய்த்துறையினர் வலியுறுத்துவதாக கூறப்படுகிறது. இதனால், சாதாரண நிலையில் உள்ள செங்கல் சூளை உரிமையாளர்கள் சிரமப்பட்டு ஆணவங்களை சமர்ப்பித்தும் செம்மண் எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனால், செம்மண் தட்டுபாடு ஏற்படுவதால் உற்பத்தி குறைந்து செங்கல் ஒன்று ரூ.10 வரை விற்கப்படுகிறது. வரும் காலங்களில் செங்கல் உற்பத்தி கேள்விக்குறியாகும் எனவும் இதை நம்பியுள்ள செங்கல் அறுக்கும் பெண்கள், லாரிகள், விவசாய கூலிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.
செங்கல் உற்பத்தி நிறுத்தப்படுவதால் கட்டுமான பணி முடங்கிவிடும் எனவும் அரசு செம்மண் எடுக்க விதித்துள்ள கட்டுபாடுகளை தளர்த்தி செங்கல் உற்பத்திக்கு உதவ வேண்டும் எனவும் கூறி செங்கல் உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் தாசப்பகவுண்டர் புதூரில் நேற்று (ஜூலை 31) கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். கோபிசெட்டிப்பாளையம் கோட்டாட்சியர் திவ்யபிரியதர்ஷினி இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதையும் படிங்க: வெளிநாடுகளில் சூதாட்டம் - சிக்கோட்டி பிரவீன் உள்ளிட்ட 5 பேருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்