கோயம்புத்தூர்: பொள்ளாச்சி நகர்ப்புறப் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான பெட்ரோல் பங்கில், 19 வயது பெண் ஒருவர் பணிபுரிந்து வருகிறார். அந்த பெட்ரோல் பங்கிற்கு தினந்தோறும் சென்று பெட்ரோல் போடும் 17 வயது சிறுவனுக்கும் அப்பெண்ணிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, அவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்பு சிறுவன் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது, மருத்துவமனைக்கு சென்ற 19 வயது பெண், தனது பெற்றோர் தனக்கு மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருப்பதாக சிறுவனிடம் கூறியுள்ளார்.
மேலும், அதற்குள் நாம் திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கூறிய அப்பெண், சிறுவனை பொள்ளாச்சி அருகிலுள்ள ஒரு கோயிலுக்கு அழைத்துச்சென்று திருமணம் செய்து கொண்டார்.
பின்பு, வீட்டிற்கு வந்த சிறுவனிடம் பெற்றோர் விசாரித்தபோது, அந்த பெண்ணும் தானும் திருமணம் செய்துகொண்டதாகத் தெரிவித்துள்ளார்.
பெண் கைது
இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுவனின் பெற்றோர், இது குறித்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் அந்தப் பெண்ணிடம் விசாரித்ததில், சிறுவனை கட்டாயத் திருமணம் செய்தது தெரியவந்தது.
உடனே, கோவை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் உத்தரவின்பேரில் துணை கண்காணிப்பாளர் தமிழ்மணி அறிவுறுத்தலின்படி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கோப்பெருந்தேவி, அந்தப் பெண்ணை போக்சோ சட்டத்தில் கைது செய்து கோவை போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: பெற்ற தாயின் உதவியுடன் மகள் உள்பட 5 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை... சென்னையில் கொடூரம்!