கோவை: சாடிவயல் அருகே சிறுவாணி மலை அடிவாரத்தில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் உதவியாளராக பணியாற்றி வருபவர் காளிதாசன். இவர் அங்குள்ள அரசு குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று (ஜூன்27) மதியம் தனது மனைவி ஷீபா உடன் கோவைக்கு சென்று விட்டு பேருந்தில் வீடு திரும்பியுள்ளார்.
அப்போது சின்னார் வனத்துறை சோதனை சாவடியில் இறங்கிய காளிதாசன் தனது இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது சர்க்கார் போரத்தி என்ற பழங்குடியினர் கிராமத்தின் அருகே அவ்வழியாக வந்த ஒற்றை காட்டு யானை அவரை கீழே தள்ளி மிதித்தது. இதனால், அவர் எழுப்பிய அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியிலுள்ள பழங்குடியின மக்கள் மீட்டு அந்த யானையை காட்டுக்குள் விரட்டினர்.
இது குறித்து வனத்துறைக்கும் தகவல் கொடுத்தனர். அங்கு வந்த வனத்துறையினர் தோல்பட்டை மற்றும் நெஞ்சுப் பகுதியில் பலத்த காயம் அடைந்த காளிதாசனை அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, அவரது உடல் உடற்கூராய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில் தனது மனைவியுடன் கோவை நகருக்கு பேருந்தில் சென்று விட்டு மீண்டும் சிறுவாணி அடிவாரம் வந்தபோது சோதனை சாவடியில் நிறுத்தியிருந்த தனது இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு செல்லும் வழியில் இந்த சம்பவம் நடைபெற்றதாகவும் முதல் கட்டமாக காளிதாசன் குடும்பத்திற்கு வனத்துறை சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக போலுவம்பட்டி வனச்சரகர் சுசீந்திரன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: Video: காரை தாக்கி கண்ணாடியை பறக்கவிட்ட யானை - திக் திக் நிமிடங்கள்...