கோவை: ஆட்சியர் அலுவலகத்தில் கோவை மாவட்டத்தில் கரோனா தொற்றுத் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து செந்தில்பாலாஜி அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தினார். பின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர், "கோவை மாவட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அடிப்படையில் அரசு நிர்வாகத்தின் சார்பில் ஏழாயிரத்து 368 கரோனா சிகிச்சைக்கான படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.
தனியார் மருத்துவமனைகளைப் பொறுத்தவரை நான்காயிரத்து 691 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. மொத்தமாக கோவை மாவட்டத்தில் 12 ஆயிரத்து 59 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. அதில் நான்காயிரத்து 397 ஆக்சிஜன் படுக்கைகள், தீவிர சிகிச்சைப் பிரிவில் 853 ஆக்சிஜன் படுக்கைகள் உள்ளன.
பரிசோதனைகளை அதிகரிக்க நடவடிக்கை
கோவை மாவட்டத்தில் 27 லட்சத்து 90 ஆயிரத்து 400 பேர் தடுப்பூசி செலுத்த தகுதி உள்ள நிலையில் 27 லட்சத்து இரண்டாயிரத்து 946 பேர் மட்டுமே தடுப்பு ஊசி செலுத்திக் கொண்டுள்ளனர். மீதமுள்ளவர்களுக்கு இல்லங்களில் சென்று தடுப்பூசி செலுத்த ஆலோசனை நடைபெற்றுள்ளது.
கோவை மாவட்டத்தில் நாளொன்றுக்கு ஏழாயிரம் முதல் ஒன்பதாயிரம் வரை பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் அதனை 12 ஆயிரமாக உயர்த்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கோவை மாவட்டத்தில் 11 சோதனைச் சாவடிகளில் கேமராக்கள் பொருத்தப்பட்டு அதனை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்தபடியே நேரடியாகக் கவனிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கு உள்ளூர் தொலைக்காட்சிகள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஆலோசனைகள் மேற்கொள்ளவும் உள்ளன.
1.61 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும்
கோவை மாவட்டத்தில் மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளுக்கும் 100 சிறப்பு அலுவலர்கள் 33 பேரூராட்சிகளுக்கும் 33 சிறப்பு அலுவலர்கள் 12 ஊராட்சிகளுக்கும் 12 சிறப்பு அலுவலர்கள் ஏழு நகராட்சிகளுக்கும் ஏழு சிறப்பு அலுவலர்கள் என மொத்தம் 152 சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, வாட்ஸ்அப் குழு மூலம் தகவலைப் பகிர்ந்து வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
மேலும் கோவை மாவட்டத்தில் தடுப்பு நடவடிக்கைகளுக்காக தற்பொழுது உள்ள இரண்டாயிரத்து 206 மருத்துவப் பணியாளர்களுக்கு இரண்டு மாத கூடுதல் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. மேலும் ஆயிரத்து 105 மருத்துவப் பணியாளர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்டத்தில் 15 வயது முதல் 18 வயது உடையவர்களில் ஒரு லட்சத்து 61 ஆயிரம் பேர் தடுப்பூசி செலுத்த வேண்டிய நிலையில் ஒரு லட்சத்து நான்காயிரத்து 752 இரண்டு பேர் மட்டுமே தடுப்பு ஊசி செலுத்திக் கொண்டுள்ளனர்.
ஜல்லிக்கட்டு கலந்தாலோசனை
ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு போடப்படுவதால் சனிக்கிழமைகளில் மளிகைக் கடைகளில் கூட்டம் கூடுவதை மக்கள் இயன்றவரை தவிர்த்துக் கொள்ள வேண்டும். கோவை மாவட்டத்தில் பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்த வேண்டியவர்கள் 70 ஆயிரத்து 950 பேர், அதில் தற்போதுவரை ஆயிரத்து 671 பேர் செலுத்திக் கொண்டுள்ளனர்.
வெளிநாடுகளிலிருந்து வரும் நபர்களும் தடுப்பூசி தேவைப்பட்டால் கட்டுப்பாட்டு மையத்தைத் தொடர்புகொள்ளலாம். ஜல்லிக்கட்டு விழாவைப் பொறுத்தவரை விழாக் குழுவினர் கலந்தாலோசனை செய்வதாகக் கூறியுள்ளனர். அவர்கள் கலந்தாலோசனை செய்துவிட்டு தெரிவித்தால் மாவட்ட நிர்வாகம் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்" எனத் தெரிவித்தார்.
முன்னதாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு மையத்தில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகளிலிருந்து வரும் நேரலை சிசிடிவி காட்சிகளை செந்தில்பாலாஜி பார்வையிட்டார்.
இதையும் படிங்க: அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கு தள்ளிவைப்பு