கோவையில் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வரும் நிலையிலும் நாள்தோறும் பாதிப்பு எண்ணிக்கையில் முதலிடத்தில் இருந்து வருகிறது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில், இன்று (ஜூன்.13) 18 வயதுக்கு மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் மற்றும் அவர்களது பாதுகாவலர்களுக்கு மட்டும் சிறப்பு முகாம்கள் மூலம் கோவிஷீல்ட் முதல் மற்றும் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
77 மையங்களில் தடுப்பூசி
கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளிலுள்ள 77 மையங்களில் மதியம் ஒரு மணி முதல் மாற்றுத் திறனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. இந்நிலையில், பிற பொது மக்கள் இன்று தடுப்பூசி செலுத்திக்கொள்ள வருவதை தவிர்க்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது. தடுப்பூசி செலுத்திக்கொள்ள வரும் மாற்றுத் திறனாளிகளின் அடையாள அட்டை, ஆதார் உள்ளிட்ட ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, டோக்கன் அடிப்படையில் அவர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது.
மாநகரப் பகுதிகளில் 31 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், புறநகர் பகுதிகளில் 46 பள்ளிகளும் 18 வயதுக்கு மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாவலர்கள் காத்திருந்தும் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.