கோயம்புத்தூர்: கூடலூரை அடுத்துள்ள மசினகுடி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில், கடந்த வாரம் உணவு தேடி தனியார் தங்கும் விடுதி ஒன்றின் அருகே வந்த யானையின் மீது எரியும் டையரை போட்டு கொடுங்காயம் ஏற்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து, எந்தவித உரிமமும் இல்லாமல் தனியார் தங்கும் விடுதி நடத்தி வந்த இருவரை வனத்துறையினர் கைது செய்தனர். மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் மசினகுடியில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதில், ஊராட்சி நிர்வாகத்தில் வீடு கட்டுவதற்கு அனுமதி வாங்கி, தனியார் தங்கும் விடுதி நடத்தி, அதில் சுற்றுலாப் பயணிகளை தங்க வைத்தது தெரிய வந்தது. இந்த ஆய்வில், அதை போல 50க்கும் மேற்பட்ட வீடுகளில் தனியார் தங்கும் விடுதிகள் இயங்கியது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து உரிய உரிமம் இல்லாமல் இயங்கி வந்த 56 தனியார் தங்கும் விடுதிகளை கண்டறிந்து, அவற்றிற்கு தபால் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில், 15 நாட்களுக்குள் காலி செய்யவில்லை எனில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் ஊராட்சி நிர்வாகத்தில் அனுமதி பெற கடிதம் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் சில தனியார் தங்கும் விடுதி உரிமையாளர்கள் விடுதிகளை தாங்களாகவே மூடி நோட்டீஸ் ஒட்டி உள்ளனர்.
இது குறித்து சூழலியல் ஆர்வலர்கள் கூறுகையில், மசினகுடி பகுதியில் நூற்றுக்கணக்கான ரிசார்ட்டுகள் முறையான அனுமதி இன்றி இயங்கி வருகின்றன. இதன் காரணமாக யானை உள்ளிட்ட வனவிலங்குகள் பாதிக்கப்படுவதால் அனைத்து தங்கும் விடுதிகளையும் சோதனை செய்து அதன் உரிமம் உண்மையானதா? என கண்டறிய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.