கோயம்புத்தூர்:கோவை புளியகுளத்தை சேர்ந்த தீபிகா என்பவருக்கும் பாலக்காடு மாவட்டம் மன்னார்குடி அருகே புதுப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் அவினாஷ் என்பவருக்கும் மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. அவினாஷ் பெங்களூரில் உள்ள உணவு டெலிவரி நிறுவனத்தில் ஊழியராக பணி புரிந்து வந்த நிலையில் கடந்த இரண்டு மாதமாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வருகிறார்.
இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. மனைவி குழந்தையின் ஆரோக்கியத்தில் மிகவும் அக்கறையுடன் இருப்பவர் என கூறப்படுகிறது. அவினாஷ் காலையில் எழுந்ததும் குழந்தையை கொஞ்சுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
இந்நிலையில் நேற்று காலையில் எழுந்து அவினாஷ் குழந்தைக்கு முத்தம் கொடுத்து கொஞ்சி உள்ளார். இதைப் பார்த்த தீபிகா பல் துலக்காமல் குழந்தைக்கு ஏன் முத்தம் கொடுக்கிறீர்கள் என கேட்கவே கணவன் மனைவியிடையே தகராறு ஏற்பட்டது இதனால் ஆத்திரம் அடைந்த அவினாஷ் அரிவாள் கொண்டு மனைவியை தாக்கியுள்ளார்.
சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்க்கும் போது தலையில் படுகாயம் ஏற்பட்டு மயங்கி கிடந்த தீபிகாவை அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பயனின்றி உயிரிழந்ததை தொடர்ந்து அப்பகுதி பொதுமக்கள் அவிநாசை பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இது குறித்து கேரளா காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி அவினாஷை கைது செய்தனர். இது கோவையில் உள்ள தீபிகாவின் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க:விமானத்தில் பெண் பயணியிடம் சில்மிஷம் செய்த விவகாரம் - மீண்டும் பேராசிரியர் கைது!