பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகம் 968 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதில் பொள்ளாச்சி, உலாந்தி, மானாம்பள்ளி, அமராவதி, வால்பாறை, டாப்சிலிப் ஆகிய ஆறு வனச்சரகங்களை உள்ளடக்கிய வனப்பகுதியில் யானை, கரடி, புலி, சிறுத்தை, புள்ளிமான் உள்ளிட்ட விலங்குகள் அதிகளவில் உள்ளன.
இந்நிலையில் தம்மம்பதி அருகிலுள்ள புங்கன் ஓடை, போத்தமடை வனப்பகுதிகளில் இரண்டு புலிகள் இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற வனத்துறையினர் மற்றும் மருத்துவக் குழுவினர் புலிகள் இறந்து கிடந்த பகுதியை ஆய்வு செய்து உடற்கூறாய்வு மேற்கொண்டனர்.

உடற்கூறாய்வில் இறந்த புலிகளின் வயிற்றில் இறந்த காட்டுப் பன்றியின் இறைச்சி இருந்ததாகவும், பன்றி இறைச்சியில் விஷம் வைத்து புலிகள் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
சமீப காலமாக வனத்தை ஒட்டியுள்ள விவசாய நிலங்களிலுள்ள கால்நடைகளை, புலி வேட்டையாடி கொன்றுள்ளதாக உரிமையாளர்கள் வனத்துறையினரிடம் புகாரளித்திருந்தனர்.
புலி தொடர்ச்சியாக கால்நடைகளை வேடையாடியதால் அவர்கள் விஷம் வைத்து கொன்றிருக்கலாம் என்ற கோணத்தில் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டுமெனவும், இரண்டு புலிகளின் இறப்பிற்கு காரணமானவர்கள் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வன ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.