கோவையின் இருவேறு பள்ளிகளில் மாணவ மாணவியர்களுக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சூலூர் அருகே உள்ள லட்சுமிநாயக்கன்பாளையத்தில் அரசு உதவி பெறும் பள்ளியில் விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்கள் நேற்று (செப்.19) மாலை தேநீர் அருந்தியபோது திடீரென வாந்தி எடுத்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, வாந்தி எடுத்த 12 மாணவர்களை சூலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அப்பள்ளி நிர்வாகத்தினர் அழைத்துச்சென்றனர்.
பின்னர் அங்கு மாணவர்களை சிகிச்சை செய்த நிலையில் மாணவர்களுக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படவில்லை; மாணவர்களுக்கு உரிய சிகிச்சை அரசு மருத்துவமனை சார்பாக தரப்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவர்கள் அனைவரும் பள்ளியில் உள்ள விடுதிக்கு பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதேபோல, கோவை மாநகராட்சி இராமநாதபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9, 10ஆம் வகுப்பு மாணவிகளுக்கு இன்று (செப்.20) திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அனைவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு அளிக்கப்பட்ட முதல் உதவி சிகிச்சைக்குப் பிறகு, மாணவிகள் வீடு திரும்பினர்.
இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடம் கேட்டபோது, மாணவிகளுக்குத் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மற்ற மாணவர்களுக்கு ஏதேனும் சளி, காய்ச்சல் போன்ற தொந்தரவுகள் இருந்தால் விடுமுறை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டதாகத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: பள்ளிக்கூடங்களில் சாதிப் பாகுபாடு காட்டப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்...அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை