கோயம்புத்தூர்: பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் ஊத்துக்குளி செல்லமுத்து நகரை சேர்ந்தவர் உமர் பாரூக். இவர் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். முதல் மகன் சுலைமான். வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியான சுலைமான் பத்தாவது வரை படித்துள்ளார். சிறுவயது முதலே உடற்பயிற்சியில் அதிக ஆர்வம் கொண்ட சுலைமான், ராஜா மில் ரோட்டில் உடற்பயிற்சி கூடம் நடத்தி வரும் அபுல்ஹாசன் என்பவரிடம் சில ஆண்டுகளுக்கு முன்பு பயிற்சிக்கு சென்றார்.
அங்கு அபுல்ஹாசன், வைசாக், கோவையை சேர்ந்த சந்தோஷ் ஆகிய பயிற்றுனர்கள் கொடுத்த ஊக்கம் மற்றும் முறையான பயிற்சியின் மூலம் சுலைமான் பல்வேறு இடங்களில் நடைபெற்ற ஆணழகன் போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை குவிக்கத் தொடங்கியுள்ளார். மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டிகளில் பரிசுகளை குவித்த சுலைமான் சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற போட்டியில் கலந்துகொண்டு மிஸ்டர் தமிழ்நாடு பட்டத்தையும் வென்றார். அதனைத் தொடர்ந்து தேசிய அளவில் நடைபெற்ற என்.பி.சி. ஆணழகன் போட்டியில் சீனியர் மற்றும் ஜூனியர் ஆகிய இரு பிரிவுகளிலும் இரண்டாம் இடம் பிடித்தார்.
இவ்வாறு பதக்கங்களை குவித்து பொள்ளாச்சிக்கு பெருமை சேர்த்த சுலைமானுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு விழா நடத்தினர். அக்கம் பக்கத்தில் வசிப்போர் மிகுந்த ஆர்வமுடன் வந்து சுலைமானுக்கு சால்வை அணிவித்து தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். இதுகுறித்து சுலைமானின் தந்தை உமர்பாரூக் கூறியதாவது, "எனது இரு மகன்களும் வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளிகள். சிறிய அளவில் காய்கறி வியாபாரம் செய்யும் நாங்கள் வாடகை வீட்டில்தான் வசித்து வருகிறோம்.
எனது மகனின் உடற்பயிற்சிக்கு மாதம் ஒன்றுக்கு ரூபாய் 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை செலவாகிறது. அதோடு போட்டிகளில் கலந்துகொள்ள வெளியூர் செல்வதற்கும் அதிக செலவு ஆகிறது. தன்னார்வலர்கள் யாரேனும் நிதிஉதவி செய்தால் எனது மகன் இன்னும் பல போட்டிகளில் வென்று பொள்ளாச்சிக்கு பெருமை சேர்ப்பார் என்பதில் சந்தேகமில்லை" இவ்வாறு தெரிவித்தார்.
பயிற்சியாளர் அபுல்ஹாஸன் கூறுகையில், "மாவட்ட மாநில அளவில் மட்டுமின்றி தேசிய அளவிலும் நடைபெறும் ஆணழகன் போட்டிகளில் கலந்து கொள்ளும் சுலைமான் பரிசுகளையும் பதக்கங்களையும் குவித்து வருகிறார். நாங்கள் முறையாக பயிற்சி கொடுப்பதோடு மட்டுமின்றி அவரது விடா முயற்சியும் கடும் பயிற்சியுமே இந்த வெற்றிகளுக்கு காரணம். ஏழ்மை நிலையில் உள்ள சுலைமானுக்கு அரசு வேலை மற்றும் அரசின் சார்பில் நிதி உதவி கிடைத்தால் இது போன்ற இன்னும் பல சாதனையாளர்கள் பொள்ளாச்சியில் உருவாவார்கள்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: இரண்டு நாட்களில், இரண்டு லாக்-அப் மரணங்கள்: அண்ணாமலை ஆதங்கம்