கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சி.பி.ஐ அலுவலர்கள் மேலும் 3 பேரை விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
பொள்ளாச்சியில் பண்ணை வீடு உள்பட பல இடங்களில் இளம் பெண்களை அடைத்து வைத்து பாலியல் துன்புறுத்தி வீடியோ எடுத்த விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த திருநாவுக்கரசு, சபரி, சதீஷ்குமார், வசந்தகுமார், மணிகண்டன், ஆகிய 5 பேரை காவலர்கள் கைது செய்தனர். இந்த வழக்கை சி.பி.ஐ விசாரணை நடத்திவருகிறது.
இந்த வழக்கில் கைதான திருநாவுக்கரசுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே, கைதான 5 பேர்களின் கூட்டாளிகளான பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த மேலும் 3 பேரை நேற்று விசாரணைக்காக சிபிஐ அலுவலர்கள் அழைத்துச் சென்றுள்ளனர். அவர்கள், பாபு, ஹெரோன் பால் மற்றும் பொள்ளாச்சி அதிமுக மாணவரணி செயலாளர் அருளானந்தம் ஆகியோர் ஆவார்கள்.
இந்த வழக்கு விசாரணை இறுதி கட்டத்தை நெருங்குவதால் 3 பேரிடமும் நடத்தப்படும் விசாரணை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.
இந்நிலையில் பாபு, ஹெரோன் பால் மற்றும் அருளானந்தம் ஆகியோரை சிபிஐ அலுவலர்கள் கைதுசெய்தனர். இதனால், பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பாக பல உண்மைகள் வெளியாகலாம் எனத் தெரிகிறது.
இதையும் படிங்க: கூட்டாளியை காட்டிக் கொடுத்த நண்பர்கள்... மொத்தமாக சிக்கிய கும்பல்!