கோயம்புத்தூர்: மேற்கு தொடர்ச்சி மலை தொடர் ஏராளமான யானைகளின் வாழ்விடமாக உள்ளது. உணவு மற்றும் தண்ணீர் தேடிச் செல்லும் யானைகள் அடிக்கடி வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்குள் வந்து செல்வது வழக்கம்.
உணவுக்காக வனத்தை விட்டு வெளியே வரும் யானைகள், குப்பை மேடுகளில் கொட்டப்படும் காய்கறிக் கழிவுகளை உட்கொள்கின்றன. அப்போது பிளாஸ்டிக் கவர்களையும் சேர்த்து உட்கொள்வதால் யானைகளுக்கு உடல்நலம் பாதிக்கப்படுவதோடு உயிரிழப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது.
குப்பைக் கிடங்கு
இந்நிலையில் மருதமலை மலைக்கோயிலுக்கு செல்லும் பாதையில் கிடந்த யானை சாணத்தை, கோயம்புத்தூர் வன உயிரின பாதூகாப்பு அறக்கட்டளை தலைவரும் சூழலியல் ஆர்வலருமான முருகானந்தம் ஆய்வு செய்தார்.
அதில் பிளாஸ்டிக் கவர்கள், முகக் கவசம், நாப்கின், மசாலா காவர்கள் இருந்தது தெரியவந்தது. மேலும், பயன்படுத்திய முகக்கவசங்களை குப்பைகளிலிருந்து யானைகள் உட்கொள்வதால் யானைகளுக்கும் கரோனா பரவும் அபாயம் உள்ளது.
இதுகுறித்து முருகானந்தம் கூறுகையில், ”மருதமலைக்கு அருகிலுள்ள சோமையம்பாளையம் கிராமத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் எதிர்ப்பை மீறி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு குப்பை கிடங்கு அமைக்கப்பட்டது.
இது குறித்து வனத்துறை தரப்பிலிருந்தும் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்தப் பகுதியில் இருந்து குப்பை கிடங்கை அகற்ற முடியவில்லை.
நடவடிக்கை
வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் ஐந்து யானைகள், இந்த குப்பை மேடு உள்ள பகுதிக்கு அவ்வப்போது வருகின்றன. இங்கு யானைகள் வரும்போது அவற்றை கண்காணித்து அங்கிருந்து விரட்டி வருகிறோம்.
தொடர்ச்சியாக யானைகள் பிளாஸ்டிக்கை உட்கொள்ளும் போது அவை உயிரிழக்க வாய்ப்பு அதிகம் உள்ளது. இதனை துறை சார்ந்த அலுவலர்கள் கவனத்தில் கொண்டு சென்று யானைகள் பிளாஸ்டிக் கழிவுகளை உட்கொள்வதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: Sunday Lockdown: கழுகுப்பார்வையில் மயிலாடுதுறை முக்கிய சாலைகளும் தென்காசியின் வெறிச்சோடிய பாதைகளும்!