கோயம்புத்தூர்: தமிழ்நாடு, புதுச்சேரியில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திரமோடி இன்று (பிப்.25) காலை 7.45 மணிக்கு தனி விமானம் மூலம் காலை 10.25 மணிக்கு சென்னை வந்தார்.
புதுச்சேரியில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கிவைத்து விட்டு மாலை கோயம்புத்தூர் வந்தடைந்தார். மாலை 3.40 மணிக்கு கொடிசியா மைதானம் வந்த அவருக்கு மக்கள் வழிநெடுகிலும் நின்று வரவேற்பு அளித்தனர்.
விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசு வழங்கினர்.
எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு மலரஞ்சலி!
இதையடுத்து, விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் மேடையில் வைக்கப்பட்டிருந்த மறைந்த முதலமைச்சர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் திருவுருவ படங்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து தமிழ்தாய் வாழ்த்துடன் விழா இனிதே தொடங்கியது. விழாவில் வரவேற்புரை நிகழ்த்திய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், “செம்மொழியான தமிழ்மொழி பிரதமர் நரேந்திர மோடி மனதுக்கு மிகவும் நெருக்கமானது. தமிழ் மொழியின் பெருமைகளை பிரதமர் நரேந்திர மோடி உலகம் முழுக்க பரப்புவதற்கு மனமார்ந்த நன்றிகள். புதிய திட்டங்களை தொடங்கிவைக்க தமிழ்நாடு வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடியை தமிழ் மக்கள் சார்பாக வருக வருக என வரவேற்கிறேன்” என்றார்.