கோயம்புத்தூர் தெற்குத் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த கமல் ஹாசன் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக நேற்று (ஆக 1) கோவை வந்தார்.
ஆனால் கோயம்புத்தூரில் கரோனா பரவல் அதிகமாக இருப்பதால் மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிகளை ரத்துசெய்தார். இந்ந நிலையில் இன்று (ஆக. 2) காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த கமல் ஹாசன் மாவட்ட ஆட்சியரிடம் கிராம சபைக் கூட்டம் நடத்தக்கோரி மனு அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கிராமசபைக் கூட்டத்தை நடத்தக்கோரி மனு அளித்துள்ளோம். 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குப் பிறகு கிராமசபைக் கூட்டத்தை நடக்கவே இல்லை. இதுதான் எங்கள் குறை. அதை மாவட்ட ஆட்சியரிடம் மனு மூலம் தெரிவித்துள்ளோம்.
அடுத்த கிராம சபை விரைவில் நடக்கும் என எதிர்பார்க்கின்றோம். பட்ஜெட்டில் கிராம சபைகளுக்கென தனி ஒதுக்கீடு குறித்து அறிவிக்க வேண்டும். கூட்டம் கூடுவதை அரசு விரும்பவில்லை. அதனால் நன்றி தெரிவிக்கும் நிகழ்வுகள் ரத்துசெய்யப்பட்டுள்ளன" எனத் தெரிவித்தார்.
கிராமசபைக் கூட்டம் நடத்தக்கோரி தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் மக்கள் நீதி மய்யம் சார்பில் மனு அளிக்கின்றனர். அதன் ஒரு பகுதியாக கோயம்புத்தூரில் கமல் ஹாசன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றுவதுபோல் இல்லை'